தமிழக அரசின் நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு சைக்கிள்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சைக்கிளின் விலை வரிகள் உட்பட ரூ.7,235 ஆகவும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூ.7,476 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விலையில் சைக்கிள்களை வாங்கினால், தமிழக அரசுக்கு மொத்தம் சுமார் ரூ.392 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியைத் தாண்டி கூடுதலாக ரூ.115 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்ட பிறகு, தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அட்டவணை குறித்த விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
