தமிழகத்தில் இன்று (அக்டோபர் 24) பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, கேரளா வழியாக வடதமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை இருக்கலாம். ஏனைய தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 31–32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24–25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: அக்டோபர் 24 முதல் 26 வரை தென்தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35–45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
