சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரணப் பள்ளங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் ஆர்.சி. செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் ரவுண்டானா பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதற்காக சேதப்படுத்தப்பட்ட சர்வீஸ் சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் மேலும் சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான பள்ளங்களாக மாறியுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பலர் உடல் உறுப்புகளை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, சேதமடைந்த சர்வீஸ் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமான ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
