சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கலங்கரை விளக்கம் முதல் அடையாறு அருகே உள்ள திரு.வி.க. மேம்பாலம் வரையிலான உயரடுக்கு மேம்பாலத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ள இந்த மேம்பாலத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) ரூ.38.10 லட்சம் செலவில் தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. திட்ட அறிக்கையைத் தயாரிக்க தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. ஒன்று காமராஜர் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும், மற்றொன்று பட்டினப்பாக்கம் சுற்றுச்சாலை வழியாகவும் அமையும் வகையில் ஆய்வு செய்யப்படுகிறது. இறுதி வழித்தடம் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
திட்ட அறிக்கையில் போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகள், மழைநீர் வடிகால், சந்திப்பு மேம்பாடு, சர்வீஸ் சாலைகள் மற்றும் நுழைவு, வெளியேறும் சரிவுப்பாதைகள் குறித்த விவரங்கள் இடம்பெறும்.
சாந்தோம், மெரினா, பட்டினப்பாக்கம் மற்றும் அடையாறு பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்த இந்த மேம்பாலம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. DPR தயாரிக்கப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்படலாம்.
