பாலிவுட் திரையுலகையே உலுக்கியுள்ள நடிகர் டைகர் ஷ்ராஃப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தற்போது ஒரு பகீர் உண்மை வெளிவந்துள்ளது. கைதான குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்களின் முதல் குறி டைகர் ஷ்ராஃப் அல்ல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் என்பது தெரியவந்துள்ளது. சல்மான் கானின் பாந்த்ரா இல்லமான கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பை பல நாட்களாக நோட்டமிட்ட இந்த கும்பல், அங்கு போலீஸ் பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்ததால், அவரை நெருங்க முடியாமல் தங்கள் திட்டத்தை மாற்றி பின்வாங்கியுள்ளனர்.
பாலிவுட் வட்டாரத்தில் ஒரு மாபெரும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்த இந்த கும்பல், இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் நடிகர் டைகர் ஷ்ராஃப் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சாதாரணமாக வெளியே செல்வதை தெரிந்து கொண்டுள்ளனர். அதன் விளைவாகவே, ஜூஹூ பகுதியில் கால்பந்து விளையாடிவிட்டு திரும்பிய டைகர் ஷ்ராஃபின் கார் மீது ஏழு ரவுண்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய பீகார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று ஷூட்டர்களை, மும்பை மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினர் இணைந்து கோட்டா ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சல்மான் கானுடன் திரையுலகில் இணைந்து பணியாற்றும் எவராக இருந்தாலும் அவர்கள் இலக்காக மாறுவார்கள் என அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆடியோ மூலம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த மான் வேட்டை விவகாரத்தில் இருந்து சல்மான் கான் மீது இந்த கும்பல் வன்மத்துடன் செயல்பட்டு வருவதும், சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர் பாபா சித்திக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. டைகர் ஷ்ராஃபிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். சல்மான் கான் தான் முதல் குறி என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளதால், அவரது இல்லத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
