அமெரிக்க அரசியல் களம் தற்போது எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையிலான பிரம்மாண்ட நிதி விவகாரத்தால் அதிரத் தொடங்கியுள்ளது.
வரும் நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள மிக முக்கியமான இடைக்காலத் தேர்தலில், குடியரசு கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
இதுவரை சுமார் 26 ஆயிரத்து 343 கோடி ரூபாயை டிரம்ப்பின் கட்சிக்கு மஸ்க் நன்கொடையாக அளித்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இது அதிபரின் கடந்த இரண்டு ஆண்டுகால செயல்பாட்டிற்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் இது கருதப்படுகிறது.
இந்தத் தேர்தலில் கீழ்சபையான காங்கிரஸின் 435 இடங்களுக்கும், மேல் சபையான செனட்டில் உள்ள 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், அது அதிபர் டிரம்பிற்கு மிகப்பெரிய அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக, டிரம்ப் தனது ஆட்சியில் புதிய சட்டத் திருத்தங்களையோ அல்லது விதிகளையோ கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் ஆதரவு மிக அவசியம்.
ஒருவேளை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுவிட்டால், டிரம்பால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாது.
அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து டிரம்பிற்கு எதிராகக் குற்றவியல் நடைமுறைகளைக் கொண்டு வந்து, அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலைத் தவிர்க்கவே, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.
டிரம்பின் இந்த வெற்றிக்குத் துணையாக எலான் மஸ்க் தனது ‘அமெரிக்கா பிஏசி’ என்ற அமைப்பின் மூலம் நிதி மழையைப் பொழிந்து வருகிறார். இதில் செனட் லீடர்ஷிப் ஃபண்டிற்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும், பிரதிநிதிகள் சபை தேர்தல்களுக்காக சுமார் 1,900 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024 அதிபர் தேர்தலின் போது டிரம்ப்பிற்காக 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த மஸ்க், அதன் பிறகு டிரம்புடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பதவியில் இருந்து விலகினார்.
இருப்பினும், தற்போதைய சூழலில் டிரம்ப் வெற்றி பெறுவது மஸ்க்கின் வணிக நலன்களுக்கும் அவசியம் என்பதால், இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் கைகோர்த்துள்ளார்.
தனது பதவியைத் தக்கவைக்கவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் டிரம்ப் தற்போது இந்தியத் தேர்தல்களைப் போலவே பல்வேறு பண ரீதியான வாக்குறுதிகளையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
