8-வது ஊதியக்குழு முக்கிய ‘அப்டேட்’! மத்திய அரசு ஊழியர்களே ரெடியா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்குழு தொடர்பாக ஒரு மிக முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, அதாவது டிஏ (DA), தற்போது ஜனவரி 2026-க்குள் 60 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

வெறும் 30 மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த 14 சதவீத உயர்வு, 8-வது ஊதியக்குழுவின் மிக முக்கியமான முடிவான ‘பிட்மென்ட் ஃபேக்டர்’ (Fitment Factor) மாற்றத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இப்போது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8-வது ஊதியக்குழுவின் மூன்று பேர் கொண்ட குழு, கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி பெங்களூருவில் ஒரு மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் மும்பையில் அடுத்தகட்ட விவாதங்கள் நடைபெறவுள்ளன. கடந்த 11 மாதங்களில் டெல்லி, லடாக், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி என இந்தியா முழுவதும் இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் விலைவாசி உயர்வால், 7-வது ஊதியக்குழு வழங்கிய சலுகைகள் போதுமானதாக இல்லை என்பதே ஊழியர் சங்கங்களின் பிரதான புகாராக உள்ளது.

இந்த ஊதியக்குழுவில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் ‘பிட்மென்ட் ஃபேக்டர்’ தான். இதுதான் ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியத்தைப் புதிய ஊதிய அமைப்பிற்கு மாற்ற உதவும் ஒரு பெருக்கல் காரணியாகும்.

6-வது ஊதியக்குழுவில் 1.86 ஆகவும், 7-வது ஊதியக்குழுவில் 2.57 ஆகவும் இருந்த இந்த காரணியை, இப்போது 3.68 முதல் 3.83 வரை உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஒருவேளை ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள 18,000 ரூபாயிலிருந்து 69,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்திலிருந்து ஒரு தற்காலிகப் பாதுகாப்பை வழங்கினாலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும் ஊதிய விகிதங்கள் ஊழியர்களின் உண்மையான வாங்கும் சக்தியைச் சிதைப்பதாக ரயில்வே மற்றும் இதர அரசு ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இன்றைய நவீன குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பழைய ஊதியக் கணக்கீடுகள் போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

மும்பையில் நடைபெறவுள்ள அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்த இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் பல ஆண்டுகாலக் கனவு நனவாகப் போகிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News