“எங்கள் நாட்டின் மீது நீங்கள் ஒரு சிறு தாக்குதல் நடத்தினால் கூட, அடுத்த நொடியே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி உங்களை மொத்தமாக அழித்துவிடுவோம்!” என உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ (NATO) படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்துள்ள இந்த இறுதி எச்சரிக்கை, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் மாபெரும் நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!
போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய இரண்டு நேட்டோ நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ள ரஷ்யாவின் மிக முக்கிய ராணுவத் தளம்தான் ‘காலினின்கிராட்’ (Kaliningrad). உக்ரைன் போர் காரணமாக இந்த நகரத்திற்கான போக்குவரத்தை நேட்டோ நாடுகள் துண்டிக்க நினைத்தால், அதன் விளைவு உலகையே அழிக்கும் அணு ஆயுதப் போராக மாறும் என மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். எந்தவொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் போர் தொடுக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்றாலும், தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்குச் சிறு அச்சுறுத்தல் வந்தாலும் எங்களிடம் உள்ள அத்தனை அணு ஆயுதங்களையும் நாங்கள் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவை விட நேட்டோ படைகள் அளவில் இரண்டு மடங்கு பெரியவை என்பதையும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருக்கும் அணு ஆயுத பலத்தையும் நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு ரஷ்யாவிடம் அதிரடியான ‘Competitive Advantage’ ஆயுதங்கள் இருப்பதாகவும் புதின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எந்த நேரத்திலும் போர் எதார்த்த நிலையை மீறிச் செல்லலாம் என்றும், அது திரும்பி வர முடியாத ஒரு பேரழிவாக மாறக்கூடும் என்றும் அவர் உலக நாடுகளைக் கடுமையாக எச்சரித்தார்.
ரஷ்யாவின் இந்த பகிரங்க மிரட்டலுக்குப் பதிலளித்துள்ள நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, “நேட்டோ ஒரு தற்காப்பு அமைப்பு மட்டுமே. ரஷ்யாவின் இத்தகைய அணு ஆயுத மிரட்டல்கள் உலக அமைதிக்கு எந்த வகையிலும் உதவாது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என்றும் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஆலைகள் மீது நடத்திய தாக்குதல்களால், ரஷ்யாவிற்கு சுமார் 1 சதவீத ஜி.டி.பி (GDP) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாகக் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷ்யா நடத்தும் தீவிரத் தாக்குதல்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வல்லரசு நாடுகளின் இந்தத் தொடர்ச்சியான அணு ஆயுத மிரட்டல்களும், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் உக்ரைன் போரும், உலக அளவில் மூன்றாம் உலகப்போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
