வங்கிகள் வாரத்தில் எத்தனை நாள் இயங்கும்? மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்!

இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும், அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.

இந்தச் செய்தி உண்மையா? வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதில் உள்ள சிக்கல் என்ன? இதோ மத்திய அரசின் அதிரடி விளக்கம்! இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு, ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி, மற்றும் பங்குச்சந்தை அலுவலகங்கள் எல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்குவதைப் போல, தங்களுக்கும் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டும் என வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்குப் பதிலாக, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் நாற்பது முதல் ஐம்பது நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்யத் தயார் என்றும் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கூகுள் பே போன்ற ‘யு.பி.ஐ’ (UPI), மொபைல் பேங்கிங் மற்றும் ஏ.டி.எம் (ATM) சேவைகளை மட்டுமே பயன்படுத்துவதால், வங்கிகள் இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது என்பது ஊழியர்களின் முக்கிய வாதமாக உள்ளது.

தங்களின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் இருபத்தி எட்டாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு இந்தியா முழுவதும் மாபெரும் தொடர் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக, பொதுமக்களின் சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த இருபத்தி ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கூட இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்பட்டன.

ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க மத்திய அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்ததால், வங்கி ஊழியர்கள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவும், இனி அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வதந்தி இணையத்தில் வேகமாகப் பரவியது.

இந்த வதந்திக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே, இது தொடர்பான இறுதி முடிவை அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை வழக்கம் போல இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Related News

Latest News