சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவை… கட்டணம் எவ்வளவு?

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட மெட்ரோ சேவைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. வழித்தடம் பயணிகள் சேவைக்கு தயாராகியுள்ளது. இந்த வழித்தடத்தில் அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ஆலப்பாக்கம் மற்றும் சாலிகிராமம் மெட்ரோ நிலையங்களின் பணிகள் முழுமையாக முடிவடையாததால், தொடக்கத்தில் அங்கு ரயில்கள் நிற்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து வடபழனி வரை பயணிக்க ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி–போரூர் சந்திப்பு, போரூர்–வடபழனி உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News