தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு உள் கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், ஈரோடு, நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும், அக்டோபர் 1-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அக்டோபர் 2-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகத்தில் மழை தொடரும்.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதிகளில் செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
