வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட குறைவாகப் பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இயல்பை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. இதனால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பாத நிலையிலும், விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சாதகமான காற்று குவிதல் காரணமாக இந்த அமைப்பின் தாக்கம் தமிழகத்தின் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக செப்டம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று செப்டம்பர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் புயலாக வலுப்பெறும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பு புயலாக மாறினால் வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என்றும், தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News