KFC- பிரியர்களுக்கு ‘பேரதிர்ச்சி’! கெட்டுப்போன ‘சிக்கன்’..2 பேருக்கு நேர்ந்த சோகம்!!

கடலூர் நகரில் இயங்கி வரும் பிரபல பன்னாட்டு உணவகமான கேஎஃப்சியில், கெட்டுப்போன உணவை வழங்கியதால் அதை உண்டு இரு வழக்கறிஞர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு சர்வதேச பிராண்ட் உணவகத்தில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதாக எழுந்துள்ள இந்த புகார், உணவுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று கடலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் கனிமொழி, புஷ்பராஜ் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் கடலூரில் உள்ள கேஎஃப்சி உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் வழக்கம்போல சிக்கன் மற்றும் மயோனைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அப்போது, தங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் கனிமொழி, உடனடியாக உணவக நிர்வாகத்திடம் சென்று இதுகுறித்து முறையிட்டுக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆனால், வழக்கறிஞரின் கேள்விகளுக்கு உணவக நிர்வாகத்தினர் எவ்வித முறையான பதிலையும் தெரிவிக்காமல், உணவிற்கான பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறி விவகாரத்தை முடிக்க முயன்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், அந்த உணவுப் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துச் சென்று அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கேஎஃப்சியில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கனிமொழி மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவருக்கும் கடுமையான மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இருவரும் உடனடியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் கனிமொழி இதுகுறித்துத் தெரிவிக்கையில், தங்களுக்கு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவைக் கேட்டதற்கு உணவக ஊழியர்கள் ஒழுங்காகப் பதிலளிக்கவில்லை என்றும், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் உணவைக் குப்பையில் வீசி எறிந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், உடனடியாகத் தாம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததாகவும், அதன்பின்னரே தனக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கேஎஃப்சி உணவகத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகளின் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அவற்றை விரிவான ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு கேஎஃப்சி உணவக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிகாரிகள், முதற்கட்ட நடவடிக்கையாக 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட உணவு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, சட்டப்படி அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Related News

Latest News