தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 18-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 35-36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
இதனிடையே, செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
