தமிழகத்தில் மின்சார வாரியத்தின் பெயரில் ஒரு புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உங்களுடைய கடந்த மாத மின்சாரக் கட்டணம் இன்னும் அப்டேட் ஆகவில்லை, எனவே இன்று இரவு 9:45 மணிக்கு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என ஒரு குறுஞ்செய்தி உங்கள் செல்போனுக்கு வந்தால், அதை ஒருபோதும் நம்பாதீர்கள்.
இது மக்களைப் பதற்றமடையச் செய்து, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காகச் சைபர் குற்றவாளிகள் விரித்துள்ள ஒரு வலை ஆகும்.
சமீபத்தில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ஊழியருக்கு இது போன்ற ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர் தன்னை மின்சார வாரிய அதிகாரி போல அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு மின்சாரக் கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுள்ளார். அந்த நபரின் வாட்ஸ்அப் பெயர் ‘bill update EB’ எனச் சேமிக்கப்பட்டிருந்ததால், அது அதிகாரப்பூர்வமான எண் என்று அந்த ஊழியர் நம்பியுள்ளார்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ஊழியர் உடனடியாகத் தனது பகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம் மின்வாரிய உதவிப் பொறியாளரைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார்.
அப்போதுதான் அந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. மின்சார வாரியம் இது போன்ற காலக்கெடு விதித்து வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் அல்லது வாட்ஸ்அப் செய்தியும் அனுப்புவதில்லை என்று அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது சைபர் மோசடியாக இருக்கலாம் என்பதால், உடனடியாக அந்த அழைப்பைத் துண்டிக்குமாறு அவர் எச்சரித்துள்ளார். சரியான நேரத்தில் கிடைத்த இந்த ஆலோசனையால், அந்த ஊழியரின் பணமும், அவரது போனில் இருந்த தனிப்பட்ட தகவல்களும் திருடப்படுவது தவிர்க்கப்பட்டது.
சைபர் குற்றவாளிகள் இப்போது அரசு அலுவலகங்களின் பெயர்களிலேயே மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு அரசு வழங்கும் அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது செயலிகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இது போன்ற மோசடிப் புகார்களுக்கு உடனடியாக ‘1930’ என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது உங்கள் வங்கி விவரங்களைப் பகிரவோ வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
