சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணைச் சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியாவை மையமாக வைத்து நடத்திய ‘ஃப்ரீடம் எட்ஜ்’ (Freedom Edge) என்ற ஐந்து நாள் கூட்டு கடற்படைப் பயிற்சி நிறைவடைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, வடகொரியா இந்த அதிரடிப் பதிலடியைக் கொடுத்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 5:20 மணியளவில், வடகொரியாவின் வான்சன் (Wonsan) பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கிப் பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்ற இந்த ஏவுகணைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஜப்பான் உளவு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
தங்கள் நாட்டு எல்லைக்கு அருகே அமெரிக்கக் கூட்டணியினர் நடத்தும் இத்தகைய ராணுவப் பயிற்சிகளை, தங்கள் நாட்டின் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாகவே வடகொரியா கருதுகிறது.
இது வடகொரியாவுக்கு மட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அந்நாடு சாடியுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பலம் வாய்ந்த தங்கையான கிம் யோ ஜாங், தென்கொரியாவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான உறவு என்பது “எஜமான் மற்றும் வேலைக்காரன்” போன்றது என்று அவர் சாடியதோடு, அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தென்கொரியா செயல்படுவது அந்த நாட்டிற்குப் பேரழிவையே தரும் என்றும் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். வடகொரியாவிடம் இப்போது சுமார் 57 சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் தாம் மீண்டும் கிம் ஜாங் உன்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனது பதவிக்காலத்தில் மூன்று முறை கிம்மைச் சந்தித்த ட்ரம்ப், அவருடன் ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், வடகொரியா தனது அணு ஆயுத பலத்தைப் பெருக்குவதிலேயே குறியாக உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதியும் வடகொரியா இது போன்ற ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருந்தது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் ராணுவ ரீதியான அச்சுறுத்தல்களை வடகொரியா தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேசச் சமூகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் உள்ள சவால்களை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த ராஜதந்திரப் போரில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
