ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகள்: தமிழக அரசின் ‘15,000’ கோடி மெகா திட்டம்!!

தமிழகத்தில் நகர்ப்புற ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கனவான சொந்த வீட்டு வசதியை நிறைவேற்ற, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

பொதுவாக அரசு நிதி ஒதுக்கீடு மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் மட்டுமே கட்டப்பட்டு வந்த ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், இனி தனியார் முதலீட்டுடன் பிரம்மாண்டமாக உருவாகப் போகின்றன.

சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வாரியம் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதால், வீட்டு வசதிக்கான தேவையும் பன்மடங்கு பெருகியுள்ளது. அதே சமயம், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஒரு திட்டத்தை முடிப்பதற்கான செலவும் அதிகரித்துள்ளது.

இதனால், வழக்கமான நிதி ஆதாரங்களை மட்டும் நம்பியிருக்காமல், கூடுதல் நிதியைத் திரட்ட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ‘நிலப் பகிர்வு’ (Land-Sharing) என்ற ஒரு புதிய முறையை வாரியம் ஆய்வு செய்து வருகிறது.

இதன்படி, வாரியம் தனது நிலத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும், அதில் அந்த நிறுவனங்கள் வீடுகளைக் கட்டும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் ஒரு பகுதி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்; மீதமுள்ள வீடுகளை அந்தத் தனியார் நிறுவனங்கள் பொதுச் சந்தையில் விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம்.

முன்னதாக ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’ என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் நகர்ப்புற வாழ்விடங்களை மேம்படுத்தி வருகிறது.

ஏற்கனவே சில தனியார் நிறுவனங்கள் இத்தகைய திட்டங்களில் ஆர்வம் காட்டினாலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. ஆனால், தற்போதைய மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15,000 கோடி ரூபாய் இலக்கை அடைய, தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கவும் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக முடியும் என்றும், தரம் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலப் பகிர்வு மாதிரியில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க என்னென்ன ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளை வழங்கலாம் என்பது குறித்து புதிய முன்மொழிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.

தமிழக அரசின் இந்த அதிரடித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் பல ஆயிரம் குடும்பங்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகள் மிக விரைவாகக் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அரசின் இந்த முன்னெடுப்பு, தமிழகத்தின் நகர்ப்புற கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related News

Latest News