தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 12ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 13, 14ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாக இருக்கும். நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
