ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் இப்போது ஒரு ஆபத்தான எல்லைக்கோட்டைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா தனது 5 கச்சா எண்ணெய் கப்பல்களைச் சிதைத்த சில மணிநேரங்களிலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் ‘அல்-அஸ்ராக்’ (Al-Azraq) விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணை மழையைப் பொழிந்துள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்ட இந்த “தண்டனை நடவடிக்கை” (Punitive Operation), அமெரிக்காவின் போர் விமானத் தளங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோர்டான் ராணுவம் சுமார் 18 ஈரானிய ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்திய போதிலும், ஈரானின் ஆக்ரோஷம் உலக நாடுகளை உறைய வைத்துள்ளது.
இந்த மோதலின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய பழிவாங்கும் படலம் ஒளிந்துள்ளது. அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரான் குறிவைத்ததற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் 5 பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் கடலில் மூழ்கடித்தன.
“நீங்கள் எங்களைத் தாக்க முயன்றால், உங்கள் எண்ணெய் கப்பல்கள் ஒவ்வொன்றாகக் கடலில் மூழ்கடிக்கப்படும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விடுத்த எச்சரிக்கையை ஈரான் கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
மாறாக, அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் கடற்கரையை ஒட்டி நிற்கும் எண்ணெய் கப்பல்களையும் இனி தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்குச் சர்வதேசச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையே சாட்சி. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இப்போது 100 டாலரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக முடக்கியுள்ளதால், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஈரான் சிறைபிடித்துள்ளது அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
அது பழைய மாடல் என்று அமெரிக்கா சமாளித்தாலும், ஈரானின் கையில் சிக்கியுள்ள அந்தத் தொழில்நுட்பம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முறிந்த நிலையில், இரு நாடுகளும் மாறி மாறித் தளங்களையும் கப்பல்களையும் தாக்கி வருவது, ஒரு மிகப்பெரிய பிராந்தியப் போரை நோக்கி உலகைத் தள்ளியுள்ளது. தப்பிப்பதற்கான நேரம் அமெரிக்காவிற்கு மிகக்குறைவாகவே இருப்பதாகப் புவிசார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்!
