அமெரிக்காவை புரட்டிபோட்ட திடீர் ‘பேரழிவு’! பாலங்கள், கட்டிடங்களை வாரிச் சுருட்டிய ‘வெள்ளம்’!

அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில், இயற்கையின் கோரத் தாண்டவம் அரங்கேறியுள்ளது.

சனிக்கிழமை மதியம் சுமார் இரண்டரை மணியளவில் தொடங்கிய திடீர் வெள்ளம், அங்குள்ள பிரைட் ஏஞ்சல் கிரீக் மற்றும் பாண்டம் ரேஞ்ச் பகுதிகளை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துள்ளது.

இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களைத் தேடும் பணியில் அரிசோனா மாநில அதிகாரிகளும், தேசியப் பூங்கா நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம், மிகப்பெரிய பாறைகள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளைச் சுக்குநூறாக உடைத்து, கொலராடோ ஆற்றில் கொண்டு வந்து சேர்த்தது.

இந்த வெள்ளத்தின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஆற்றின் குறுக்கே இருந்த நடைபாலங்கள் அனைத்தும் வைக்கோல் போல அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும், நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் வகையில் ஆற்றுப் படுகை விரிவடைந்து, புதிய நீர்வீழ்ச்சிகளே உருவானது போன்ற காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

அங்குள்ள ஆய்வாளர்கள் கூறுகையில், இது போன்ற ஒரு மாபெரும் மாற்றத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் கண்டதில்லை எனத் திகைப்புடன் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து உயிர் தப்பிய எரிக்கா வயோலா என்ற பயணி கூறுகையில், மழை தொடங்கிய 30 நிமிடங்களிலேயே நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, கண்ணெதிரே கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு தாங்கள் உறைந்து போனதாகக் குறிப்பிடுகிறார்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, செங்குத்தான மலைப்பகுதிகளில் பெய்த கனமழை, சுமார் 6,000 அடி உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே பாய்ந்ததே இந்த அழிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது அந்தப் பகுதியையே ஒரு போர்க்களம் போல மாற்றிவிட்டது.

தற்போது வரை பாண்டம் ரேஞ்ச் பகுதியில் சிக்கியிருந்த 62 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் ஏதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது குறித்துப் பெரும் கவலை நிலவுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான பிரைட் ஏஞ்சல் கேம்ப் மற்றும் பாண்டம் ரேஞ்ச் போன்றவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மாலை வரை மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News