ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மையைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
அதன்படி, ரயில் நிலையங்கள் அல்லது ரயில் பெட்டிகளில் குப்பை கொட்டினால் இனி ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்பு அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வே (ரயில்வே வளாகங்களில் தூய்மையைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான தண்டனைகள்) விதிகள், 2012-ல் திருத்தம் செய்து, ஆகஸ்ட் 24 அன்று அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகள் 2026-ம் ஆண்டுக்கான திருத்த விதிகளாக அமலுக்கு வந்துள்ளன. மேலும், விதிக்கப்பட்ட ரூ.1,000 அபராதத்தை செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் தகுதியான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம்.
அங்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ரயில்வே வளாகங்களில் குப்பை கொட்டுவது மட்டுமின்றி, சமைத்தல், குளித்தல், துப்புதல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளித்தல், வாகனங்கள், பாத்திரங்கள் அல்லது துணிகளை கழுவுதல் போன்ற செயல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அனுமதியின்றி ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்வே சொத்துகளில் சுவரொட்டி ஒட்டுதல், எழுதுதல், வரைதல் அல்லது சேதப்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளும் குப்பைகளை முறையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என புதிய விதிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
