கனடா நாட்டின் தலைநகரான ஒட்டவாவில், சுமார் 25 ஆண்டுகளாக ‘ட்ரம்ப் அவென்யூ’ என்று அழைக்கப்பட்ட ஒரு குடியிருப்பு தெருவின் பெயரை மாற்ற அந்நாட்டு நகர சபை ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.
இந்தத் தெருவிற்குப் புதிய பெயராக ‘டாக்கோ அவென்யூ’ (Taco Avenue) என்று பெயர் சூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சர்வதேச அரசியல் மோதல் ஒளிந்திருக்கிறது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே உள்ள புகழ்பெற்ற ‘ஒன்டாரியோ ஏரியின்’ (Lake Ontario) பெயரை ‘அமெரிக்க ஏரி’ (Lake America) என மாற்றுவதாக வெள்ளை மாளிகையில் வைத்து அதிரடியாக அறிவித்தார்.
கனடா அதிகாரிகள் தங்களை மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அவர்கள் மிகவும் “மோசமான மனிதர்கள்” என்றும் சாடிய ட்ரம்ப், உடனடியாக இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்தினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கவே கனடா இப்போது ட்ரம்ப் பெயரில் உள்ள தெருவின் பெயரை மாற்ற முடிவெடுத்துள்ளது.
சரி, அது என்ன ‘டாக்கோ’? ஏதோ ஒரு உணவுப் பண்டத்தின் பெயர் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். வால் ஸ்ட்ரீட் வட்டாரத்தில் ட்ரம்ப்பை கிண்டல் செய்வதற்காக வைக்கப்பட்ட செல்லப் பெயர்தான் இந்த ‘TACO’.
இதற்கு “Trump Always Chickens Out” என்று அர்த்தம், அதாவது ட்ரம்ப் தனது கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார் அல்லது இக்கட்டான நேரத்தில் பின்வாங்குவார் என்பது இதன் உட்பொருள்.
டாக்கோ அவென்யூ தவிர, ட்ரம்ப்பிற்குப் பிடிக்காத முன்னாள் அதிபர் ‘ஒபாமா அவென்யூ’ என்ற பெயரையும் சூட்டலாமா என்று கனடா அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
ஒட்டவாவில் உள்ள இந்த ட்ரம்ப் அவென்யூ, டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரிலேயே அமைந்த ஒரே தெருவாகும். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு இந்தத் தெருவின் பெயரை மாற்ற முயற்சி நடந்தபோது, குடியிருப்பு வாசிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், இப்போது ட்ரம்ப்பின் ஏரிப் பெயர் மாற்றத்தால் கடுப்பான அதிகாரிகள், இந்த தெருவின் பெயர் தங்களுக்கு ஒரு “அவமானம்” என்று கூறி, வரும் அக்டோபர் மாதத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகப் பெயரை மாற்றத் துடிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த 2025 ஜனவரியில், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றிய ட்ரம்ப், இப்போது கனடாவுடனான வர்த்தகப் போரில் எல்லையைத் தாண்டி புவியியல் பெயர்களிலும் விளையாடி வருகிறார்.
ஒரு பாரம்பரியமான ஏரியின் பெயரையே மாற்றும் அதிகாரம் தன்னிடம் இருப்பதாக ட்ரம்ப் நினைக்க, அதற்குப் பதிலடியாகத் தெருவின் பெயரில் அரசியல் செய்யும் கனடாவின் இந்த நகர்வு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஈகோ யுத்தத்தின் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
