தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்திருந்தனர்.
அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் வரை உயர்ந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற அளவுக்கு வந்தது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விட கச்சா எண்ணெயில் அதிக கவனம் செலுத்தியது விலை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பொருளாதார மாற்றங்கள் மற்றும் பங்குச்சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களால், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பலரும் தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
