அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! 2 லட்சம் விசாக்கள் ரத்து? இந்தியர்களுக்கு பாதிப்பா?

அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ஒரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.

சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் அமெரிக்காவுக்குள் நுழைந்து, பின்னர் நிரந்தரமாகத் தங்குவதற்காக தஞ்சம் கோரியவர்களின் விசாக்களை மொத்தமாக ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது, அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறையும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றன.

அதாவது, 2016-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்ட B1 எனப்படும் வணிக விசா மற்றும் B2 எனப்படும் சுற்றுலா விசாக்களைப் பெற்று, அமெரிக்காவுக்குள் வந்த பிறகு தஞ்சம் கோரியவர்கள் அல்லது தற்போது தஞ்சம் கோரி வருபவர்கள்தான் இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்கு.

இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “குறுகிய காலப் பயணிகளாக நாட்டிற்குள் நுழைவதாகக் கூறிவிட்டு, பின்னர் நிரந்தரமாகத் தங்குவதற்காக தஞ்சம் கோருபவர்களின் விசாக்களை ரத்து செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விசா ரத்து நடவடிக்கை, உடனடியாக அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுக்காது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாறாக, அவர்களின் தற்போதைய சுற்றுலாப் பயணி என்ற தகுதிநிலை ரத்து செய்யப்பட்டு, அவர்களின் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் வேறு விதமாக வகைப்படுத்தப்படலாம். இருப்பினும், இது சட்டரீதியான பல சவால்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் கிறிஸ்டோபர் லாண்டோ தனது சமூக வலைதளப் பதிவில், “போலியான தஞ்சக்கோரிக்கைகளால் மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

குடிவரவுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தஞ்சம் கோருவது ஏற்கத்தக்கதல்ல” என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் தனது இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து, விசா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறார். சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்வது, அதிகப் பத்திரப் பணம் கோருவது, சில நாடுகளுக்கு விசாத் தடை விதிப்பது என இந்த நடவடிக்கைகள் நீள்கின்றன.

அந்த வரிசையில், தற்போது தஞ்சம் கோருவோர் மீதான இந்த நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்வோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News