நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி முதல் அனைத்து மாநில தலைநகரங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
விழாவில் முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகை த்ரிஷாவும் தனது தாயாருடன் கலந்து கொண்டார். விழா மேடையில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா அருகில் த்ரிஷா அமர்ந்திருந்தார். மேடைக்கு வந்த த்ரிஷாவை ஷோபா சிரித்த முகத்துடன் வரவேற்றார். மேலும், முதலமைச்சர் விஜய்யை த்ரிஷா சல்யூட் அடித்து மரியாதையுடன் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.
விஜய் தேர்தலில் வெற்றி பெற்றபோதும், அவர் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் த்ரிஷா நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் சுதந்திர தின விழாவில் அவரது வருகையும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
