ரஷ்யாவின் ‘S-400’ ஏவுகணைத் தளம் காலி! புதினின் ₹13,000 கோடி அரண்மனைக்கு உக்ரைன் ‘பேரிடி’?

உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் இதயப் பகுதிக்குள் புகுந்து ஒரு மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘சொகுசு அரண்மனை’ இருக்கும் கருங்கடல் கடற்கரைப் பகுதியில், அந்த அரண்மனையைப் பாதுகாப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ‘எஸ்-400 ட்ரையம்ப்’ (S-400 Triumph) என்ற அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கி அழித்துள்ளன.

சுமார் 12 மைல் தொலைவிலிருந்த இந்த ஏவுதளம், தாக்கப்பட்ட பிறகு 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீப்பிடித்து எரிந்ததாக உக்ரைன் ராணுவ தளபதி ராபர்ட் புரோவ்டி தெரிவித்துள்ளார்.

இந்தச் சொகுசு அரண்மனை சாதாரணமானதல்ல; 2021-ல் மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியால் அம்பலப்படுத்தப்பட்ட இந்த மாளிகையில் கேசினோ, திரையரங்கம், ஐஸ் ரிங்க், மதுபானக் கூடங்கள் என ஒரு சொகுசு உலகமே அடங்கியுள்ளது.

சுமார் 27 சதுர மைல் பரப்பளவைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் மற்றும் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், உக்ரைன் ட்ரோன்கள் இதனை ஊடுருவித் தாக்கியுள்ளது ரஷ்யாவிற்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாதுகாப்பு தளத்தைப் பயன்படுத்திதான் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வந்ததாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் தனது ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யாவிற்குள் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மட்டும் சுமார் 450-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் ரஷ்ய வான்பரப்பிற்குள் புகுந்து, டாட்டர்ஸ்தான் (Tatarstan) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியுள்ளன.

இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகியுள்ளன. ரஷ்யாவின் உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பதன் மூலம், போரைத் தொடர முடியாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

உக்ரைனின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இறங்கி வர மறுக்கிறது. “பிரச்சனையின் அடிப்படை காரணங்களைத் தீர்க்காமல் போரை நிறுத்தவோ அல்லது தற்காலிகமாக முடக்கவோ முடியாது” என்று ரஷ்ய வெளியுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

புதினின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் மீதே உக்ரைன் குறிவைத்துத் தாக்குவது, இந்தப் போரை ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனிவரும் நாட்களில் ரஷ்யா இதற்கு எத்தகைய பதில் தாக்குதல் நடத்தும் என்பதே சர்வதேச நாடுகளின் அச்சமாக உள்ளது.

Related News

Latest News