இந்தியாவில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றம் வரவுள்ளது. வழக்கமாக பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளுக்கு மாற்றாக, பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் முடிவுகளைப் பொறுத்து, எதிர்காலத்தில் அதிக அளவில் பாலிமர் நோட்டுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
புதிய நோட்டுகள் சிறப்புப் பொருளால் தயாரிக்கப்படுவதால், வழக்கமான காகித நோட்டுகளை விட நீண்ட காலம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை எளிதில் கிழிவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், புதிய பாலிமர் நோட்டுகள் அறிமுகமானாலும் பழைய 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவிக்கப்படவில்லை. எனவே, புதிய மற்றும் பழைய நோட்டுகள் இரண்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.
புதிய நோட்டுகள் எப்போது பொதுமக்களின் கைகளுக்கு வரும், அவற்றை தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
