கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி! RBI போட்ட புதிய ரூல்ஸ்!

வங்கி கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மிக முக்கியமான நற்செய்தி. கடன் வசூல் என்ற பெயரில் வாடிக்கையாளர்களைத் துன்புறுத்தும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி கடிவாளம் போட்டுள்ளது.

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், கடன் வாங்கியவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் மிகக் கடுமையான விதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இனி கடன் வசூல் முகவர்கள் தங்களின் இஷ்டத்திற்கு வாடிக்கையாளர்களை மிரட்ட முடியாது என்பதே இதன் சாராம்சம்.

புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ போன் செய்து மிரட்டுவது இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

அதேபோல், வீட்டில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகள் அல்லது அவசர மருத்துவச் சூழல்களின் போது வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக் கூடாது என ரிசர்வ் வங்கி கறாராக உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளரின் முன் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது இதில் மிக முக்கியமான விதியாகும்.

கடன் வாங்கியவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மிரட்டுவது போன்றவை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் புகைப்படம், வீடியோக்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களைச் சிறுமைப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரில் வருவதாக இருந்தால் ஒரு நாளைக்கு முன்பே வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். வரும் முகவர் உரிய அடையாள அட்டை மற்றும் வங்கியின் அங்கீகாரக் கடிதத்தைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்போன் அல்லது லேப்டாப்களை முடக்கும் விவகாரத்திலும் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீங்கள் எந்தச் சாதனத்தை வாங்குவதற்காகக் கடன் பெற்றீர்களோ, அந்தச் சாதனத்தை மட்டுமே தவணை செலுத்தத் தவறினால் முடக்க முடியும்.

தனிநபர் கடனுக்காக வாடிக்கையாளரின் செல்போனை லாக் செய்ய அனுமதி கிடையாது. அதிலும் 60 நாட்கள் தவணை நிலுவையில் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை எடுக்க முடியும். அப்போதும் அவசர அழைப்புகள், மெசேஜ் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக் கூடாது. கடன் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் லாக் நீக்கப்பட வேண்டும்; தவறினால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 250 ரூபாய் வீதம் வங்கி அபராதம் செலுத்த வேண்டி வரும்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் கடன் வசூல் முகவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அந்தந்த வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

அனைத்து அழைப்புகளின் பதிவுகளையும் குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி மாற்றங்கள், கடன் வாங்கியவர்களைச் சட்டவிரோத மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பதோடு, ஒரு நாகரிகமான நிதிச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related News

Latest News