ஆப்பிள் ‘ஐபோன்’ பயனர்களுக்கு முக்கிய செய்தி!!

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது. ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போன், அதாவது ‘ஐபோன் அல்ட்ரா’ (iPhone Ultra) இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகலாம் என்ற தகவல் தற்போது தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய ஐபோன் அல்ட்ராவின் ஆரம்ப விலை சுமார் 2,000 $டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தற்போது சந்தையில் உள்ள சாம்சங்கின் ஃபோல்டபிள் போன்களை விட அதிக விலையாகும். இவ்வளவு பெரிய தொகையை ஒரே அடியாகச் செலுத்த முடியாத நுகர்வோருக்காக, ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் அப்கிரேட்’ (Apple Upgrade) என்ற புதிய குத்தகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஐபோன் அல்ட்ரா போனை மாதம் சுமார் 5,700 ரூபாய் முதல் 6,700 ரூபாய் வரையிலான தவணை முறையில் பயனர்கள் பயன்படுத்த முடியும். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பழைய போனைத் திருப்பி அளித்துவிட்டு, புதிய மாடலுக்கு மாறிக் கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் ஐபோன் அல்ட்ராவின் அதீத விலையைச் சாமானிய மக்களும் எளிதாக அணுக முடியும் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்புப்படி, ஐபோன் அல்ட்ரா அறிமுகமான சில மாதங்களிலேயே உலகளாவிய மடிப்புத் திரை போன் சந்தையில் சுமார் 25 சதவீத இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.

ஐபோன் 18 ப்ரோ மாடல்களுடன் இணைந்து இந்த அல்ட்ரா மாடல் களமிறக்கப்பட உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள இந்த அப்கிரேட் திட்டத்தின் கீழ், ஐபோன் 17 சீரிஸ் போன்கள் மாதம் 1,700 ரூபாய் முதலும், ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மாதம் 1,150 ரூபாய் முதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் ஐபேட் மற்றும் மேக் கணினிகளுக்கும் 24 மற்றும் 36 மாத தவணைத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஐபோன் அல்ட்ரா மாடலானது, கூகுளின் பிக்சல் ஃபோல்ட் போனைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், ஆப்பிளின் மற்ற மாடல்களை விட இதில் கூடுதல் நவீனத் தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

விலையில் மிரட்டினாலும், ஆப்பிளின் தரத்திற்கும் அதன் பிரத்யேக அனுபவத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த ஐபோன் அல்ட்ரா ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News