“முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான்” ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு, ஹாலிவுட்டில் இணைந்து ஒரு படம் இயக்கலாம் என்று அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான். விஜய் சார் மற்றும் ஜேசன் ஸ்டேதம் இருவரும் இணைந்தால் அது ரசிகர்களுக்கு மறக்க முடியாத கூட்டணியாக இருக்கும். நான் கூறிய இந்த கருத்தை ஜேசன் ஸ்டேதம் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” மேலும், அப்பா இந்த interview பாக்கணும்னு நெனைக்கிறேன்” என்றார்.

மேலும், சிறுவயதில் தனது தந்தை விஜய்யுடன் இணைந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யின் தோளில் அமர்ந்து போட்டியை பார்த்த நினைவுகள் இன்னும் மனதில் பசுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பெருமையுடன் பகிர்ந்த இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

Related News

Latest News