இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதும் தனி ஈர்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டினாலும், நகைகள் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவில் உயர்ந்தது. 2020ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.30,000க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரியில் வரலாற்றில் முதன்முறையாக ரூ.1.34 லட்சத்தை எட்டி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் முதலீட்டுக்கு மாறியதால் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.
இதன் விளைவாக ரூ.1.34 லட்சத்தை எட்டிய சவரன் விலை பின்னர் ரூ.1 லட்சம் வரை சரிந்தது. தற்போது ஒரு சவரன் ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.13,255 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
