நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘OM – Chapter 1: Udhiram – The Blood Wood’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலாகா லூவா’ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. லிரிக்கல் வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த பான்-இந்திய திரைப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ், ஷ்ரத்தா அகர்வால் மற்றும் அஸ்மத் ஜக்மாக் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்து, தனது குரலில் பாடியுள்ள இந்த மாஸ் பாடலுக்கு ரோகேஷ் வரிகள் எழுதியுள்ளார். புத்தர் கலைக்குழு, யங்கா ரிதம்ஸ் மற்றும் கடாகா சோரல் குழுவின் பங்களிப்பு பாடலுக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது. தனுஷின் உற்சாகமான நடன அசைவுகளுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார்.
எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். யானிக் பென் மற்றும் கேச்சா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தனுஷின் பிறந்தநாள் சிறப்பு பரிசாக வெளியான ‘அலாகா லூவா’ பாடல் தற்போது அனைத்து இசைத் தளங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
திரைப்படம் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் தற்போது ‘அலாகா லூவா’ பாடல் 17 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
