தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். மேடைப் பேச்சுகளில் ரசிகர்களுக்கு சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கருத்துகளைப் பகிர்வது அவரது வழக்கம்.
ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ள தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமில் தனுஷ் கலந்துகொண்டார்.
அப்போது அவர், ரசிகர்கள் வெறும் சந்திப்பு மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே கூடாமல், சமூகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும், ரசிகர் மன்றத்தின் ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காரணம், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் சமூகப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் களமிறங்கியதை பலர் நினைவுகூருகின்றனர்.
இதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நடிகர்களும் அரசியலில் வெற்றி கண்டுள்ளனர்.
இதனால், தனுஷின் இந்த கருத்துகள் எதிர்கால அரசியல் திட்டத்திற்கான முன்னோட்டமா என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதுகுறித்து தனுஷ் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
