நடிகர் அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் அடுத்த மாதம் வெளியாகும் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அஜித், அதே நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களிலும் தீவிரமாக பங்கேற்று வருகிறார். நடிப்பும், மோட்டார் விளையாட்டும் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வெற்றி கண்டது. இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் 64-ஆவது படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும், திரைத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள விஜய்க்குப் பிறகு வெளியாகவுள்ள அஜித்தின் முதல் திரைப்படம் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் அதிகரித்துள்ளது.
