விஜய் அரசின் முதல் பட்ஜெட்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் முழுநீள பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதால், 2026–27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடாக, அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் கடந்த சில நாட்களாக தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் பட்ஜெட், நிதி நிலை மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலமைச்சர் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விஜய் அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், திருமண உதவியாக தங்கம் வழங்கும் “அண்ணன் சீர்” திட்டம் போன்றவை குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் சீர்” திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளும் இடம்பெறலாம் என்பதால், விஜய் அரசின் முதல் பட்ஜெட்டை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Related News

Latest News