1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒட்டுமொத்த உலகமே நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்த தருணம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து, “மனிதனுக்கு இது ஒரு சிறிய அடி, ஆனால் மனிதகுலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்” என்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
ஆனால், அந்தச் சாதனைக்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரும் அவருடன் சென்ற பஸ் ஆல்ட்ரினும் நிலவிலேயே சிக்கி, அங்கேயே உயிரிழக்க வேண்டிய ஒரு பயங்கரமான சூழல் உருவானது பலருக்கும் தெரியாது.
உலகத்தையே அதிரவைக்கக் கூடிய அந்த மரணப் பிடியிலிருந்து அவங்களைக் காப்பாற்றியது எந்தவொரு அதிநவீனத் தொழில்நுட்பமும் இல்லை, வெறும் ஒரு பிளாஸ்டிக் பேனா தான்! அந்தப் பேனா இப்போது சுமார் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நிலவில் தங்களது பணிகளை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பத் தயாராக இருந்தபோது, அவர்கள் தங்கியிருந்த விண்கலத்தின் தரைப்பகுதியில் ஒரு சிறிய கருப்பு நிற சுவிட்ச் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அது சாதாரண சுவிட்ச் இல்லை, விண்கலத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்யக்கூடிய மிக முக்கியமான ‘சர்க்யூட் பிரேக்கர்’ சுவிட்ச். அந்த சுவிட்ச் வேலை செய்யவில்லை என்றால் இன்ஜினை இயக்க முடியாது, விண்வெளி வீரர்கள் நிலவிலிருந்து ஒரு சென்டிமீட்டர் கூட மேலே எழும்ப முடியாது.
அதாவது, அவர்கள் நிலவிலேயே நிரந்தரமாகத் தங்கி சாக வேண்டியதுதான். ஆக்சிஜன் தீர்ந்துபோகும் வரை அவர்கள் நிலவிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை உருவானது.
அந்தப் பதற்றமான சூழலில், பஸ் ஆல்ட்ரின் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார். தனது உடைமைகளில் இருந்த ‘டியூரோ ராக்கெட்’ (Duro Rocket) என்ற ஒரு சாதாரண பிளாஸ்டிக் பேனாவை எடுத்து, அந்த உடைந்த சுவிட்சுக்குள் நுழைத்து அழுத்தினார்.
என்ன ஒரு ஆச்சரியம்! அந்தப் பேனா ஒரு தற்காலிகச் சுவிட்ச் போலச் செயல்பட்டு, மின்சாரத் தொடர்பைச் சீராக்கி இன்ஜினை ஸ்டார்ட் செய்ய உதவியது.
இதனால்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்ப முடிந்தது. அந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் பேனா மட்டும் அன்று இல்லை என்றால், நிலவின் மேற்பரப்பில் மனிதனின் எலும்புக்கூடுகள் தான் எஞ்சியிருக்கும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேனா, தற்போது ஏலத்திற்கு வந்தது. உலகெங்கிலும் உள்ள சேகரிப்பாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் பேனாவை வாங்க ஐந்து பேர் கடும் போட்டியில் ஈடுபட்டனர்.
இறுதியில், ஒரு அநாமதேய நபர் சுமார் 8 லட்சத்து 57 ஆயிரத்து 600 டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடிக்கும் அதிகமான ரூபாய்க்கு இந்தப் பிளாஸ்டிக் பேனாவை ஏலத்தில் எடுத்துள்ளார்.
“நீல் தான் அந்த சுவிட்சை உடைத்தார் என்று நான் நினைக்கிறேன், இல்லை பஸ் தான் உடைத்தார் என்று நீல் நினைக்கிறார்” என பஸ் ஆல்ட்ரின் கிண்டலாகக் குறிப்பிட்டாலும், அந்தப் பேனா செய்த மாயாஜாலம் இன்றும் விண்வெளி வரலாற்றில் ஒரு உன்னதச் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய விஷயம் எப்படி உலக வரலாற்றையே மாற்றியது பாருங்கள்!
