அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு எதிர்பாராத திருப்பமாக ஈரானின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் டினா கராரி (Dena Karari) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ஈரானின் பிடியில் இருந்த அவரை, ஈரானிய அரசு ஒரு ‘நல்லெண்ண அடிப்படையில்’ விடுதலை செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், டினா கராரி தற்போது ஈரானை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற முறையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு அமெரிக்கக் குடிமகளின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய ஈரானின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டினா கராரியின் பின்னணியைப் பார்த்தால், 2024-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக ஈரான் சென்ற இவர், அங்கிருந்து திரும்ப முடியாமல் ஈரானியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.
2025-ஆம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, நிலைமை இன்னும் மோசமானது.
அவர் மீது உளவு பார்த்ததாகக் கடுமையானக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், ஈரானில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது விடுதலைக்காகத் தூதரக ரீதியாகப் பல ரகசிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த விடுதலை ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மற்றொரு பக்கம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல்கள் துளியும் குறையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
டினா கராரி விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் தான், ஈரான் மீதான தனது ராணுவத் தாக்குதல்களை மீண்டும் அமெரிக்கா தொடங்கிவிட்டது.
ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்துத் தொடர்ந்து குண்டுவீசி வருகின்றன.
இத்தகைய ஒரு பதற்றமான சூழலில், ஈரானிய அரசு தனது பிடியில் இருந்த ஒரு அமெரிக்கக் குடிமகனை விடுதலை செய்திருப்பதை டிரம்ப் ஒரு நேர்மறையான மனிதாபிமான நடவடிக்கையாகப் பார்த்தாலும், ராணுவ ரீதியான அழுத்தத்தைத் தளர்த்த அமெரிக்கா தயாராக இல்லை.
இந்த விடுதலையில் மனித உரிமை வழக்கறிஞரான ஜாரெட் ஜென்சரின் (Jared Genser) பங்கு மிக முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் 20 நாடுகளிலிருந்து 340-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவித்துள்ள இவரை, உலக ஊடகங்கள் ‘எக்ஸ்ட்ராக்டர்’ (The Extractor) என்றே அழைக்கின்றன.
ஒரு பக்கம் ஏவுகணைகளும், குண்டுகளும் பேசிக் கொண்டிருக்கும் போது, மறுபக்கம் இதுபோன்ற ரகசியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குடிமகளின் உயிரைக் காப்பாற்றியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் தனது பெரும் வெற்றியாகக் கருதுகிறது.
ஈரானின் இந்த ஒரு ‘நல்லெண்ணச் செயல்’ போரின் போக்கைத் தற்காலிகமாக மாற்றுமா அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இன்னும் வலுவாகுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
