தங்கம் வச்சிருக்கவங்க கண்டிப்பா இத பாருங்க!

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி , புதிய தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கூடுதல் பணத்தைச் செலவழித்துப் புதிய நகைகளை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளைக் கொடுத்துவிட்டு புதிய டிசைன்களில் நகைகளை மாற்றிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

நகைகளை மாற்றிக்கொள்வது செலவைக் குறைக்கும் ஒரு சிறந்த வழி என்றாலும், இதில் நாம் செய்யும் சில எளிய தவறுகள் நமக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பழைய தங்க நகைகளை மாற்றும் முன் நாம் தவிர்க்க வேண்டிய ஐந்து முக்கிய தவறுகள் என்னென்ன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பழைய நகையைக் கடையில் கொடுக்கும்போது, அதன் மாற்று மதிப்பைத் தீர்மானிப்பது அதன் தூய்மைத்தன்மைதான். ஆனால், பெரும்பாலான மக்கள் கடைக்காரர்கள் சொல்வதை அப்படியே நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். எப்போதும் உங்களது பழைய தங்கத்தின் தரப் பரிசோதனையை, அதாவது பியூரிட்டி டெஸ்ட்டை உங்கள் கண்ணெதிரே செய்யச் சொல்லிக் கேளுங்கள்.

குறிப்பாக, உங்களது நகையில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை முன்பே சரிபார்த்துக் கொள்ளுங்கள். தரம் கணிப்பதில் ஏற்படும் சிறிய வித்தியாசம் கூட உங்களது பணத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

அடுத்ததாக, பழைய தங்கத்தை மாற்றும்போது புதிய நகைக்குச் செய்கூலி, சேதாரம் கிடையாது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். பழைய தங்கம் புதிய நகையின் விலைக்கு ஈடானாலும், புதிய நகையின் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரிகளை நீங்கள் தனியாகச் செலுத்த வேண்டி வரும்.

எனவே, நகையைத் தேர்வு செய்யும்போதே செய்கூலி, சேதாரம் எவ்வளவு என்பதைத் தெளிவாகக் கேட்டு எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். அதேபோல, உங்கள் பழைய நகையில் முத்துக்களோ, பவளங்களோ அல்லது விலையுயர்ந்த கற்களோ இருந்தால், மதிப்பீடு செய்யும்போது அவற்றின் எடையைத் தனியாகக் கழித்துவிட்டு, வெறும் சுத்தமான தங்கத்தின் எடைக்கு மட்டுமே மதிப்பு கணக்கிடப்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

எப்போதுமே எடுத்தவுடனேயே முதல் கடையில் நகையை மாற்றிவிடாதீர்கள். வெவ்வேறு நகைக் கடைகளில் பழைய தங்கத்திற்கு வழங்கும் மாற்று மதிப்பு மாறுபடலாம். எனவே, இரண்டு அல்லது மூன்று முன்னணி நகைக் கடைகளுக்குச் சென்று மதிப்பீட்டை ஒப்பிட்டுப் பார்த்து, எங்குச் சிறந்த லாபம் கிடைக்கிறதோ அங்கு உங்களது நகையை மாற்றிக் கொள்ளுங்கள்.

இறுதியாக, பழைய நகையின் எடை, அதன் தூய்மை மதிப்பு, புதிய நகையின் செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி விவரங்கள் அடங்கிய முறையான அசல் ரசீதை வாங்குவது மிகவும் முக்கியம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களது பழைய தங்கத்திற்குச் சரியான மதிப்பைப் பெற்று நஷ்டமில்லாமல் புதிய நகைகளை வாங்க முடியும்.

Related News

Latest News