‘நாங்க கெஞ்சல.. போருக்கு ரெடி!’ அமெரிக்காவை நடுங்க விட்ட ஈரான்! டிரம்ப்புக்கு பெரிய ‘பல்பு’!

மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் தற்போது மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறினால், அதற்கு இணையாக மிகக் கொடூரமான நேரடிப் பதிலடியை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி முழுமையாகக் குலைந்துள்ளது.

அண்மையில், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், தங்களை ஈரானியர்கள் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையைத் தொடருமாறு கெஞ்சுவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான் அரசு, நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை என்றும், கத்தார் நாட்டின் சமாதான தூதர்களை மட்டுமே எங்கள் நாட்டிற்குள் அனுமதித்துள்ளோம் என்றும் விளக்கியுள்ளது. அமெரிக்கா மீது தங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் பேசுகையில், அமெரிக்காவுடனான இந்தப் போர் ஒருபோதும் ஈரானின் சரணடைதலில் முடிவடையாது என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எப்போது துரோகம் செய்தாலும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், எதிர்த்துப் போரிடவும் ஈரான் ராணுவம் முழுப் பலத்துடன் தயாராக உள்ளது என்றும், அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புபவர்கள் முதலில் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மீது தங்களுக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடமே தாம் நேரில் தெளிவுபடுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ஈரானின் ஆன்மீகத் தந்தை ரூஹொல்லா கொமேனியின் பேரனான அலி கொமேனி பேசும்போது, அமெரிக்காவுடன் சமாதானம் பேசுவது சாத்தியமற்ற ஒன்று என்றும், இந்தப் பேச்சுவார்த்தை என்பது போரின் மற்றொரு வடிவமே தவிர, அமைதிக்கான வழி அல்ல என்றும் கூறியுள்ளார்.

குற்றவாளியான அமெரிக்காவுடன் சமரசம் செய்ய நினைப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். கத்தார் நாட்டின் தூதுக்குழு தற்போது ஈரானில் முகாமிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ஈரானியத் தலைவர்களின் இந்த ஆவேசப் பேச்சுக்கள் அமெரிக்காவுடனான மோதல் விரைவில் ஒரு முழு அளவிலான போராக மாறும் என்பதையே காட்டுகின்றன.

Related News

Latest News