ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யணுமா? 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!! முழு விவரம் இதோ….

தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கிய பங்காற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 35,083 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டைகள் முக்கிய ஆவணமாக உள்ளன.

குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம், பொங்கல் பரிசுத் தொகுப்பு, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகளை பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அவசியமாக உள்ளது. இதனால், ரேஷன் அட்டைகளில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களில் ஏற்படும் பிழைகளை சரிசெய்வதற்காக பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூலை 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் வரும் 11.07.2026 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெறலாம்.

மேலும், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றுகள் வழங்கப்படும். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், பொருட்களின் தரம், தனியார் சந்தை சேவைகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களையும் இந்த முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் OTP மூலம் மேற்கொள்ளப்படுவதால், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகங்களுக்கு நேரில் சென்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News