உலகப் பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் இப்போது டாலரை விடத் தங்கத்தின் மீதே அதிக நம்பிக்கையை வைக்கத் தொடங்கியுள்ளன. இதில் நம் நாட்டு ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ (RBI), மற்ற நாடுகளுக்கே ஒரு மிகப்பெரிய முன்னோடியாகத் திகழ்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தங்க இருப்பின் மதிப்பு 115.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிப்பாகும். இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஏன் இந்தத் திடீர் தங்க வேட்டை? என்றால், இதற்கு மிக முக்கியமான காரணம் சர்வதேச அரசியல் சூழல்தான். 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, உலக நாடுகளின் பார்வை மாறத் தொடங்கியது. பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளத் தங்கம் மட்டுமே ஒரு பாதுகாப்பான அரண் என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொண்டன.
போலந்து போன்ற நாடுகள் வெறும் மூன்று ஆண்டுகளில் 353 டன் தங்கத்தை வாங்கிச் சேர்த்துள்ளன. சீனாவும் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது தங்க இருப்பை 245 டன் வரை அதிகரித்துள்ளது. செக் குடியரசு போன்ற சிறிய நாடுகள் கூடத் தங்களது தங்க இருப்பை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2015-ல் 557 டன்னாக இருந்த தங்க இருப்பு, தற்போது 2026-ல் 880 டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆர்பிஐ தங்கம் வாங்கும் வேகத்தைப் பலமடங்கு அதிகரித்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,000 டாலரிலிருந்து 4,000 டாலராக உயர்ந்ததும், இந்தியாவின் தங்க இருப்பின் மதிப்பை விண்ணைத் தொட வைத்துள்ளது. துருக்கி, கஜகஸ்தான், எகிப்து மற்றும் கத்தார் போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றித் தங்கத்தைச் சேமிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்கனவே உலகிலேயே அதிகத் தங்கத்தை வைத்திருப்பதால், அவை புதிதாகத் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள் தங்களது பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் தங்கத்தை ஒரு மிகப்பெரிய ஆயுதமாகக் கருதுகின்றன.
உலக அரசியல் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது, தங்கம் எப்போதும் ஒரு நிலையான மதிப்பைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே இந்த ‘கோல்டு ரஷ்’ (Gold Rush)-க்கு அடிப்படை காரணமாகும். இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை மற்றும் அதன் கையிருப்பு, உலக நாடுகளின் அதிகாரத் தராசைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
