‘ஒரு மணி நேரத்தில் தரைமட்டமாக்குவோம்!’ – ஈரானை மிரள வைத்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள மிகக் கடுமையான மற்றும் இறுதியான எச்சரிக்கை சர்வதேச அரங்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரான் தனது உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கண்ணீரில் மூழ்கியுள்ள இதே வேளையில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் அனல் பறப்பதாக உள்ளது.

“ஒன்று எங்களுடன் அணுஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் நாங்கள் தொடங்கிய வேலையை முழுமையாக முடித்துவிடுவோம்” என்று டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். ஈரானின் 9 கோடி மக்களின் எதிர்காலத்தை நினைத்தே தான் அமைதி காப்பதாகவும், இல்லையென்றால் வெறும் ஒரு மணி நேரத்தில் ஈரானின் அத்தனை பாலங்களையும் தரைமட்டமாக்க அமெரிக்காவால் முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் ஒருபோதும் அணுஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா அனுமதிக்காது என்பதில் டிரம்ப் மிகவும் உறுதியாக இருக்கிறார். “ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களை (Enriched Material) நாங்கள் கைப்பற்றுவோம்” என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் ஈரானில் ஆட்சி மாற்றத்தை (Regime Change) அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் நிலவி வரும் சூழலில், டிரம்பின் இந்த ஆவேசமான பேச்சு அந்த ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கமேனியின் இறுதிச்சடங்கில் திரண்டுள்ள லட்சக்கணக்கான மக்களைக் கிண்டல் செய்துள்ள டிரம்ப், “அங்கே லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கிறார்கள், ஒரே ஒரு குண்டு வீசினால் அத்தனை பேரையும் அடுத்த நிமிடம் அழித்துவிட முடியும். ஆனால், அப்படிச் செய்தால் நாங்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது? அதனால்தான் அவர்களை உயிரோடு விட்டுள்ளோம்” என்று மிரட்டியுள்ளார். மேலும், அங்கே மக்கள் சிந்துவது ‘போலி அழுகையாக’ கூட இருக்கலாம் என்று அவர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது ஈரானிய மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஈரான் அரசு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அர்மேனியாவில் உள்ள ஈரானியத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவிற்கு நாகரீகமோ, வரலாறோ அல்லது கௌரவமோ கிடையாது” என்று சாடியுள்ளது. “நீங்கள் கமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கலாம், ஆனால் உண்மையில் ஒரு வாசனைத் திரவிய பாட்டிலைத்தான் நீங்கள் உடைத்திருக்கிறீர்கள். இப்போது அந்த வாசனை எங்கும் பரவியுள்ளது.

மனிதர்களைக் கொல்லலாம், ஆனால் அவர்களின் லட்சியங்களை ஒருபோதும் கொல்ல முடியாது” என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. டிரம்பின் இந்த ‘டீல் ஆர் டெத்’ (Deal or Death) எச்சரிக்கை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி திரும்புமா அல்லது மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் வெடிக்குமா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News