பூமியை போலவே இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக, பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட ஒரு புதிய கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “GJ 3378b” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள், நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘கிளீஸ் 3378’ (Gliese 3378) என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள், இந்தக் கோள் குறித்த புதிய மற்றும் துல்லியமான விவரங்களை அண்மையில் வெளியிட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, “விண்வெளியில் பூமிக்கு மாற்றாக மற்றொரு உலகம் இருக்கிறதா?” என்ற நீண்ட காலக் கேள்விக்கு ஒரு நம்பிக்கையூட்டும் விடையாக அமைந்துள்ளது.

இந்த புதிய கோள் ‘கேமலோபார்டாலிஸ்’ (Camelopardalis) என்ற விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது. இந்தக் கோளின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், இது அந்த நட்சத்திரத்தின் ‘வாழத்தகுந்த மண்டலத்தில்’ (Habitable Zone) அமைந்திருப்பதுதான். அதாவது, ஒரு நட்சத்திரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் மட்டுமே அங்குத் திரவ வடிவில் நீர் இருக்க முடியும்.

இந்த “GJ 3378b” கோள், பூமியை விட 2.3 மடங்கு அதிக எடையைக் கொண்டது. இது தனது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர வெறும் 21 நாட்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மேலும், பூமி சூரியனிடம் இருந்து பெறும் கதிர்வீச்சில் 90 சதவீதத்தை இந்தக் கோள் தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது.

இந்தக் கோளைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் ‘ரேடியல் வெலாசிட்டி’ (Radial-velocity) என்ற நவீன முறையைப் பயன்படுத்தியுள்ளனர். டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட் ஆய்வகம் மற்றும் அரிசோனாவில் உள்ள விஐஎன் (WIYN) தொலைநோக்கி ஆகியவற்றின் மூலம் இந்தக் கோளின் அசைவுகள் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டன.

ஒரு கோள் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வரும்போது ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கண்டறிந்து, அதன் மூலம் அந்தக் கோளின் எடை மற்றும் சுற்றுப்பாதை காலத்தை விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இந்தக் கோளில் உயிரினங்கள் வாழத் தேவையான வளிமண்டலம் (Atmosphere) இருக்கிறதா என்பதுதான் இப்போது விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட ஆராய்ச்சியாக உள்ளது.

ஒருவேளை இந்தக் கோளில் வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்குத் தண்ணீர் இருப்பதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனை மேலும் விரிவாக ஆய்வு செய்ய, நாசா (NASA) 2040-களில் ‘வாழத்தகுந்த உலகங்கள் கண்காணிப்பகம்’ (Habitable Worlds Observatory) என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. விண்வெளியில் மனிதர்களுக்கு மற்றொரு வீடு கிடைக்கப்போகிறதா என்பதைத் தீர்மானிக்கப் போகும் இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். பிரம்மாண்டமான இந்த அண்டவெளியில் நாம் மட்டும் தனியாக இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்றுதான் இந்த “GJ 3378b” கோள் என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

Related News

Latest News