மாதத்தின் முதல் நாள்; LPG சிலிண்டர் விலை குறைப்பு… புதிய விலை இதோ..

ஈரான்–இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று கணிசமாக குறைத்துள்ளன.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாலும் சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலைகள் மாற்றப்படுகின்றன.

அதன்படி, ஜூலை 1 முதல் சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இதன் விலை ரூ.1,849.50 ஆக இருந்த நிலையில், போர் பதற்றத்தால் படிப்படியாக உயர்ந்து ரூ.3,283 என்ற உச்சத்தை எட்டியது.

இதன் தாக்கமாக ஹோட்டல்கள், மெஸ்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தியிருந்தன.

ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், வீட்டு உபயோக 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அது வழக்கம்போல ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

போர் சூழல் தணிந்துள்ள நிலையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தாலும், விலை மாற்றம் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News