மின் கட்டணம் உயரப்போகிறதா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பதில்…

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியை அமைத்துள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக குறைபாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளின் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை இன்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.2.47 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் வருவாய், செலவினங்கள், உள்கட்டமைப்பு, மனிதவளம், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கான நிதி நிலவரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

2001–2006 காலகட்டத்தில் வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,335 கோடி என இருந்தது. 2006–2011 காலத்தில் வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி என அதிகரித்தது. 2011–2016 காலத்தில் வருவாய் ரூ.1,92,972 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி என பதிவாகியுள்ளது. 2016–2021 காலத்தில் வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021–2026 காலத்தில் வருவாய் ரூ.4,07,000 கோடி, செலவு ரூ.5,02,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண உயர்வுக்கு ஏற்ப செலவினங்கள் அதிகரித்தாலும் கட்டமைப்பு மேம்பாடு போதிய அளவில் இல்லையென அமைச்சர் கூறினார். குறுகிய கால ஒப்பந்தங்களில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், இதனை நீண்டகால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் மாதம் ரூ.215 கோடி சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மின்வாரியத்தில் மொத்த பணியிடங்கள் 1,40,635 என இருந்தாலும், அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும், 65,921 காலியிடங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இவ்வாண்டிற்குள் 20,000 பேர் புதியதாக பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும், 5,000 கேங்மேன் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு மின்சார கட்டணம் உயர்வு இருக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related News

Latest News