தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் ஜூன் 26ஆம் தேதியிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள் தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூன் 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரைவும் பதிவாகலாம்.

இதனிடையே, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 28ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News