தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பிற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதேபோல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று கட்சித் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது. எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முந்தைய திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 உரிமைத் தொகையே தற்போது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு ரேஷன் அட்டை முக்கியத் தகுதியாக இருப்பதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல தகுதியான பெண்கள் திட்டத்தின் பயனை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. புதிய அரசு ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதால், புதிய பயனாளிகளும் விரைவில் சேர்க்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜிடம், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாநிலத்தின் நிதி நிலைமை தற்போது சவாலானதாக இருப்பதாகவும், நிதிநிலை சீரானதும் அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
