மாஸ்கோவில் பெய்த ‘கருப்பு மழை’! ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன்!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் வானத்திலிருந்து கருப்பு நிறத்தில் விசித்திரமான எண்ணெய் மழை பெய்து வருவது ஒட்டுமொத்த உலகையும் திகைக்க வைத்துள்ளது. உக்ரைன் ராணுவம் நடத்திய மிகப்பெரிய மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான டிரோன் தாக்குதலே இந்த அபாயகரமான சூழலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மாஸ்கோவில் உள்ள ஒரு மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் சுமார் இருநூறு டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதல், தற்பொழுது மாஸ்கோவின் தென்கிழக்கு மாவட்டங்களை ஒரு நச்சு மழையின் பிடியில் தள்ளியுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில், மாஸ்கோவின் வான்பரப்பு அடர்ந்த கரும்புகையாலும், எண்ணெய்ப் படலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் வீடியோக்களில், மாஸ்கோ வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள், வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் தெருக்கள் அனைத்தும் ஒருவித கருப்பு நிற எண்ணெய் திரவத்தால் மூடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வானத்திலிருந்து விழுந்த இந்த மெல்லிய எண்ணெய் புள்ளிகள் மக்களின் உடைகளையும், உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் மக்கள் இத்தகைய ஆதாரங்களுடன் பீதியில் இருக்கும் நிலையில், மாஸ்கோவின் அதிகாரப்பூர்வ நிர்வாகமோ இத்தகைய “எண்ணெய் மழை” ஏதும் பெய்யவில்லை எனத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே அரசு நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கங்களில் மக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது தான் இங்கு முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் ஜன்னல்களைக் கண்டிப்பாக மூடி வைக்க வேண்டும் என்றும், காற்றில் கலந்துள்ள நச்சுப் புகையைச் சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மட்டும் ரஷ்யா முழுவதையும் குறிவைத்து சுமார் ஆயிரம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிந்ததால் ஏற்பட்ட இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு, உக்ரைன் போரின் கசப்பான யதார்த்தத்தை மாஸ்கோ மக்களின் வாசற்படிக்கே கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Related News

Latest News