வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. பெட்ரோல் விலை குறைகிறது? மத்திய அரசின் பிளான் இது தான்?

22 முதல் 30 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான மத்திய கலால் வரியை மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த முடிவு பெட்ரோல் விலையை உடனடியாகக் குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் பெரும்பாலும் E20 வகையைச் சேர்ந்தது என்பதால், இந்த வரிவிலக்கு தற்போதைய பெட்ரோல் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, E22, E25, E27 மற்றும் E30 போன்ற அதிக எத்தனால் கலவைகள் கொண்ட பெட்ரோலுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் உள்ளிட்ட பல வரிகளிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அதிக எத்தனால் கலவைகள் கொண்ட எரிபொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதை ஊக்குவிக்கும்.

தற்போது இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை முன்கூட்டியே எட்டியுள்ளது. இருப்பினும் E22 முதல் E30 வரை உள்ள எரிபொருட்கள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கு உடனடி பலன் கிடைக்காது. மேலும், E20-க்கு ஏற்ற வாகனங்கள் E30 எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. அதற்காக இன்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்படும்.

எத்தனால் கலவை திட்டம் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 2014-ல் 1.53 சதவீதமாக இருந்த எத்தனால் கலவை தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்நியச் செலாவணி சேமிப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, புதிய வரிவிலக்கு இன்று பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் எரிசக்தி தன்னிறைவு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Related News

Latest News