தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காகத் தவம் கிடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, இப்போது ஒரு மிகப்பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. “அரசு வேலைதான் என் லட்சியம்” என்று இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், தேர்வர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப வேண்டும் என்று மனிதவளத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக டிஎன்பிஎஸ்சி தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது, அனைத்துப் போட்டித் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதுதான் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு தேர்வுக்கான அறிவிப்பு வெளியான பிறகு, அரசிடமிருந்து புதிய காலிப்பணியிடங்கள் குறித்த விபரம் வந்தால், அவை ‘பிற்சேர்க்கை’ (Addendum) மூலம் அதே தேர்வில் இணைக்கப்படும். அதாவது, நீங்கள் விண்ணப்பித்த பிறகு கூட பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப்-1 தேர்வுக்காகக் காத்திருப்பவர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அன்று வெளியாகவுள்ள அறிவிப்பில் பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களும் இடம்பெறும்.
அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள ஆயிரக் கணக்கான காலிப்பணியிடங்களும் படிப்படியாக டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே நிரப்பப்பட உள்ளன. இதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் இந்த ஆண்டு முதல் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுடன் இணைக்கப்பட உள்ளன. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குரூப்-4 தேர்வுகளில் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. புதிய அரசு இளைஞர்களின் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது.
